கேரளாவின் பெயரை ‘கேரளம்’ என மாற்ற குடியரசுத் தலைவர் ஒப்புதல்: மசோதா சட்டமானது
புதுதில்லி, ஆக. 17: கேரள மாநிலத்தின் பெயரை ‘கேரளா’ என்பதிலிருந்து ‘கேரளம்’ என மாற்றும் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் இந்த மசோதா அதிகாரப்பூர்வமாக சட்டமாகியுள்ளது. கேரள மாநிலத்தின் உள்ளூர் மொழியான மலையாளத்தில், அந்த மாநிலம் நீண்ட காலமாக ‘கேரளம்’ என்றே அழைக்கப்பட்டு வருகிறது.
அரசியலமைப்பிலும் அதே பெயரைப் பயன்படுத்த வேண்டும் என்று நீண்ட நாட்களாக விடுக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக, 2024 ஜூன் 24-ம் தேதி கேரள சட்டமன்றத்தில் இதுதொடர்பான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பின்னர், 2026 பிப்ரவரி 24-ம் தேதி மத்திய அமைச்சரவை இக்கோரிக்கைக்கு அனுமதி வழங்கியது.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா, மக்களவையில் ஆகஸ்ட் 11-ம் தேதியும், மாநிலங்களவையில் ஆகஸ்ட் 12-ம் தேதியும் நிறைவேற்றப்பட்டது. தற்போது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பிறகு, இந்த பெயர் மாற்றம் சட்டப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.


