தேசியம்

யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்க வழி: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்

யுபிஐ மற்றும் பிற டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு எதிர்காலத்தில் கட்டணம் விதிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலான சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த மசோதா நிறைவேறியதன் மூலம் உடனடியாக யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் அமலாகாது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

வரி மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா-2026, கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி விவாதமின்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா, பணம் செலுத்துதல் மற்றும் தீர்வுகள் அமைப்புச் சட்டம்-2007இன் பிரிவு 10Aயில் திருத்தம் செய்து, யுபிஐ உள்ளிட்ட எந்த டிஜிட்டல் பணப்பரிமாற்ற முறைகளுக்குக் கட்டணம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதை அறிவிப்பு மூலம் மத்திய அரசு தீர்மானிக்கும் அதிகாரத்தை வழங்குகிறது.

யுபிஐ பயனாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தகவலால் கவலை எழுந்த நிலையில், பொதுமக்கள் அல்லது நுகர்வோருக்குக் கட்டணம் விதிக்கப்படாது என்று நிர்மலா சீதாராமன் தெளிவுபடுத்தியுள்ளார். எதிர்காலத்தில் வணிக நிறுவனங்கள் பெறும் பெரிய அளவிலான டிஜிட்டல் பணப்பரிமாற்றங்களுக்கு ‘மர்ச்சன்ட் டிஸ்கவுண்ட் ரேட்’ (MDR) கட்டணம் விதிப்பது தொடர்பாக மட்டுமே பரிசீலிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

தற்போதைக்கு யுபிஐ மற்றும் ரூபே பரிவர்த்தனைகள் இலவசமாகவே தொடரும். கட்டணம் தொடர்பான மாற்றம் கொண்டு வர வேண்டுமெனில், மத்திய அரசு தனியாக அறிவிப்பு வெளியிட வேண்டும்; இந்த மசோதா மட்டும் கட்டணத்தைத் தானாக அமல்படுத்தாது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன