புதுச்சேரி

கூலித் தொழிலாளர்களின் மகள்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம்: கலெக்டர் குலோத்துங்கன் பாராட்டு!

புதுச்சேரி, செப். 22:
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த தினக்கூலித் தொழிலாளர்களின் மகள்கள் இருவர் நீட் தேர்வில் சாதனை படைத்து, புதுவை இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். பயில இடம் பிடித்துள்ளனர். இச்சாதனை புரிந்த மாணவிகளை மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் மேலையூர் கிராமத்தைச் சேர்ந்த கட்டிட தினக்கூலித் தொழிலாளி ஆனந்த பிரபுவின் மூத்த மகள் விசாலி (17), திருப்பட்டினம் அரசுப் பள்ளியில் பிளஸ்-2 முடித்து, அரசு நடத்திய நீட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றார். நீட் தேர்வில் சிறப்பிடம் பிடித்த இவருக்கு புதுவை இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் இடம் கிடைத்துள்ளது. இதன் மூலம் தனது கிராமத்தின் முதல் மருத்துவர் என்ற பெருமையை இவர் பெறுகிறார்.

இதேபோன்று, நிரவி அருகே உள்ள காக்காமொழி கிராமத்தைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி காமராஜரின் மகள் யோகலட்சுமி, அன்னை தெரசா அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து, அரசு நீட் பயிற்சியில் தேர்ச்சி பெற்று அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார். இந்த 2 மாணவிகளும் மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகளைத் தொடங்கியுள்ளனர்.

முன்னதாக காரைக்கால் மாவட்ட ஆட்சியராக குலோத்துங்கன் பணியாற்றியபோது, அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நீட் பயிற்சி முகாம்கள் தொடங்கப்பட்டன. அதில் பயின்ற மாணவிகள் இருவரும் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததை அறிந்த தற்போதைய புதுவை மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், அவர்களை ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், மருத்துவப் படிப்பில் முழு கவனம் செலுத்தி சிறந்த மருத்துவர்களாக உருவெடுத்து, சமூக அக்கறையுடன் மக்களுக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன