தட்டாஞ்சாவடி தொகுதியில் தி.மு.க வெற்றி உறுதி: பிரச்சாரத்தில் மாநில அமைப்பாளர் சிவா திட்டவட்டம்
புதுச்சேரி, செப். 22:
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சேதுசெல்வத்தை ஆதரித்து, திமுக மாநில அமைப்பாளர் ஆர்.சிவா தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
கொட்டுப்பாளையம் மாரியம்மன் கோவில் வீதி, கோகுலன் வீதி, நாகாத்தம்மன் கோவில் வீதி மற்றும் செல்வவிநாயகர் கோவில் பின்புற வீதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாகச் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது வாக்காளர்களிடையே அவர் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “இந்த இடைத்தேர்தல் புதுச்சேரி மக்கள் மீது திணிக்கப்பட்ட தேர்தல். முதலமைச்சர் ரங்கசாமி 8 முறைக்கும் மேலாக இத்தொகுதியில் போட்டியிட்டு, அவரை எம்.எல்.ஏ.வாகவும், அமைச்சராகவும், முதலமைச்சராகவும் ஆக்கிய தட்டாஞ்சாவடி மக்களுக்கு நன்றி கூட சொல்லாமல் ராஜினாமா செய்துவிட்டார். மாநில அந்தஸ்து மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம் போன்ற எந்த வாக்குறுதிகளையும் அவர் நிறைவேற்றவில்லை. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளன; ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில்லை.”
தொடர்ந்து பேசிய அவர், “திமுக வேட்பாளர் சேதுசெல்வம் தொழிலாளர்களுக்காகப் போராடிப் பலமுறை சிறை சென்றவர். எனவே இந்த முறை மக்கள் திமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்தால், அவர் மக்களின் குறைகளைச் சட்டமன்றத்தில் வலுவாக எடுத்துரைத்து அனைத்துத் திட்டங்களையும் பெற்றுத் தருவார். மக்களின் பேராதரவுடன் திமுக உறுதியாக வெற்றி பெறும்” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
