பிரதமர் மோடி பிறந்தநாள்: காரைக்கால் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்புகள் வழங்கிய அமைச்சர் நமச்சிவாயம்!

காரைக்கால், செப். 24:
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வரும் பொதுமக்களுக்கு ஊட்டச்சத்து உணவுப் பொருட்கள் வழங்கும் நலத்திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. நெடுங்காடு தொகுதி பாரதிய ஜனதா கட்சி தலைவர் மோகன் மற்றும் நிரவி–திருப்பட்டினம் தொகுதி பாஜக தலைவர் மணிமாறன் ஆகியோர் இணைந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொதுமக்களுக்கு சத்துணவு மற்றும் ஊட்டச்சத்து தொகுப்புகளை நேரில் வழங்கினார். நோயாளிகளின் நலம் குறித்து கேட்டறிந்த அவர், அவர்களுக்குத் தேவையான உயர்தர சிகிச்சைகள் விரைந்து கிடைப்பதை உறுதி செய்யுமாறு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில் புதுச்சேரி வேளாண்மைத்துறை அமைச்சர் ஜி.என்.எஸ். ராஜசேகரன், நிரவி–திருப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.எம். மீனாட்சி சுந்தரம், நெடுங்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி. விக்னேஸ்வரன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவக் குழுவினர் திரளாகக் கலந்துகொண்டனர்.



