புதுச்சேரி

புதுச்சேரியில் வீட்டு உபகரணங்களை இலவசமாக பழுதுபார்க்கும் சிறப்பு முகாம்: நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு!

புதுச்சேரி, 26/09/2026:

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் ஓர் அங்கமாக ‘தூய்மை திருவிழா – 2026’ (Swachhata-Hi-Seva 2026) இருவார சிறப்புத் தூய்மைப் பணி புதுச்சேரியில் கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 17-ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, பொதுமக்கள் தினந்தோறும் பயன்படுத்தும் பழுதடைந்த வீட்டு உபகரணப் பொருட்களை வீணாகக் குப்பைகளில் கொட்டி சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் வகையிலும், அவற்றைச் சரிசெய்து மறுபயன்பாட்டிற்கு (Re-use) கொண்டுவரும் நோக்கிலும் சிறப்பு முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வருகின்ற 27.09.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று புதுச்சேரி கம்பன் கலை அரங்கில் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இம்முகாம் நடைபெறவுள்ளது. இதில் கேஸ் அடுப்பு, குக்கர், அயர்ன் பாக்ஸ், கிரைண்டர், மிக்ஸி, குடை, டேபிள் ஃபேன், ரைஸ் குக்கர், இண்டக்‌ஷன் அடுப்பு மற்றும் காலணிகள் உள்ளிட்ட வீட்டுப் பயன்பாட்டு உபகரணங்கள் கூலி செலவின்றி இலவசமாகப் பழுதுபார்த்துத் தரப்படும்.

இம்முகாமில் பழுதுபார்ப்பதற்கான செய்கூலி (Labour Charge) முற்றிலும் இலவசம் எனவும், புதிய உதிரிபாகங்கள் (Spare Parts) தேவைப்படும் பட்சத்தில் அதற்கான கட்டணம் மட்டும் பொதுமக்களிடம் வசூலிக்கப்படும் எனவும் நகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு நகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன