புதுச்சேரி

தேர்தல் ஆணையத்தை கண்டித்து நாளை காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்: புதுச்சேரி எம்.பி. வைத்திலிங்கம் அறிவிப்பு

புதுச்சேரி, செப். 24:

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளைக் கண்டித்தும், தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரியும் புதுச்சேரி தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் முன்பு நாளை காங்கிரஸ் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் வெ. வைத்திலிங்கம் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புதுவை பிரதேச காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
18 வயது பூர்த்தியடைந்த இளைஞர்களைப் புதிய வாக்காளர்களாகச் சேர்ப்பதில் தேவையற்ற தாமதம் செய்வது, தகுதியான வாக்காளர் விண்ணப்பங்களை முறையின்றி நிராகரிப்பது மற்றும் ஏற்கனவே தகுதியான வாக்காளர்களின் பெயர்களைப் பெருமளவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது எனத் தேர்தல் ஆணையத்தின் மீது நாடு முழுவதும் கோடிக்கணக்கான புகார்கள் எழுந்துள்ளன.

மேலும், வாக்காளர் சேர்க்கைக்கான படிவங்கள் மற்றும் நடைமுறைகளில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் ஆகியவை தேர்தல் ஆணையத்தின் வெளிப்படைத்தன்மை மீது பல்வேறு தீவிரக் கேள்விகளை எழுப்புகின்றன. ஜனநாயகத்தில் ஒவ்வொரு இந்திய குடிமகனின் வாக்குரிமையும் பாரபட்சமின்றி முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும். தேர்தல் ஆணையத்தின் மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிலைநாட்ட வெளிப்படையான மற்றும் நேர்மையான தேர்தல் நடைமுறைகளை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகும்.

எனவே, இந்த குளறுபடிகளுக்குத் தார்மீகப் பொறுப்பேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும்; அல்லது அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி புதுச்சேரி தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அனைத்து நிர்வாகிகள், முன்னணி அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன