கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் குறைபாடு: எம்.எல்.ஏ. மோகன்தாஸ் நேரில் திடீர் ஆய்வு!

புதுச்சேரி, செப். 24: புதுச்சேரி மாநிலம் ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட கரிக்கலாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நலவழி மையத்தில் நோயாளிகளுக்கு முறையான அடிப்படை வசதிகள் இல்லை என எழுந்த புகாரைத் தொடர்ந்து, தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மோகன்தாஸ் அங்கு நேரில் சென்று தீவிர ஆய்வு மேற்கொண்டார்.
கரிக்கலாம்பாக்கம் அரசு நலவழி மையத்தில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து, மாத்திரைகளில் அவற்றை எவ்வாறு உட்கொள்ள வேண்டும் என்ற விபரங்களை உறைகளில் முறையாக எழுதிக்கொடுக்காமல் வாய்மொழியாக மட்டுமே தெரிவிக்கப்படுவதாகவும், இதனால் மருந்துகளைப் பயன்படுத்துவதில் நோயாளிகள் குழப்பமடைந்து அவதிப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. மேலும் மருத்துவமனையில் போதுமான படுக்கை வசதி, தடையற்ற மின்சார வசதி இல்லாமை மற்றும் மதிய வேளையில் வழங்கப்படும் உணவு தரமற்ற முறையில் தயாரிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
பொதுமக்களின் புகார்களைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு நேரில் சென்ற எம்.எல்.ஏ. மோகன்தாஸ், அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களிடம் நிலைமை குறித்து விரிவான ஆலோசனை நடத்தினார். நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் குறைகள் அனைத்திற்கும் போர்க்கால அடிப்படையில் தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
மேலும், நலவழி மையத்தின் சுற்றுச்சுவரை ஒட்டியுள்ள பகுதிகளில் அவசர ஊர்திகள் (ஆம்புலன்ஸ்) வந்து செல்வதற்கும் நிறுத்துவதற்கும் இடையூறாக வெளியூர்களில் இருந்து வரும் சில்லறை வியாபாரிகள் ஆக்கிரமித்துக் கடைகள் அமைத்துள்ளதாகப் பொதுமக்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, அப்பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள கடைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ. மோகன்தாஸ் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.



