காவலர்களின் குடும்பங்களுக்கு காப்பீடு விரைந்து கிடைக்க நடவடிக்கை: 11 முன்னணி வங்கி அதிகாரிகளுடன் டிஜிபி ஆலோசனை!

சென்னை, செப். 23:
பணியின்போது உயிரிழந்த காவல்துறையினரின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் காப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்கும் வகையில், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் (DGP/HoPF) முனைவர் மகேஷ் குமார் அகர்வால் IPS தலைமையில் 11 முன்னணி வங்கிகளின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ‘காவல்துறை சம்பளத் தொகுப்பு’ (Police Salary Package) திட்டத்தின் கீழ் உள்ள பல்வேறு நிலுவை கோரிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, விபத்து மரண வழக்குகளுக்காக தலா ரூ.1.00 கோடி மதிப்பிலான நிலுவையில் உள்ள 81 நிரந்தர விபத்து காப்பீடு (PAI) கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்பட்டது.
மேலும், தலா ரூ.10 லட்சம் மதிப்பிலான 250 கால ஆயுள் காப்பீடு (TLI) கோரிக்கைகள் குறித்தும் தீவிரமாக விவாதிக்கப்பட்டது. மறைந்த காவல்துறையினரின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணத் தொகை எவ்வித தாமதமுமின்றி விரைவில் சென்றடையும் வகையில், இக்கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று வங்கி அதிகாரிகளுக்கு டிஜிபி அறிவுறுத்தினார்.



