நாடு முழுவதும் 3 நாட்கள் தொடர் வங்கி வேலைநிறுத்தம்: 5 நாள் வேலை திட்டத்தை அமல்படுத்தக்கோரி வங்கி தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!

புதுச்சேரி, செப். 23:
வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வங்கிப் பணி என்ற முறையை உடனடியாக அமல்படுத்தக்கோரி, நாடு முழுவதும் செப்டம்பர் 28 முதல் 30-ஆம் தேதி வரை 3 நாட்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளதாக வங்கி ஊழியர் சம்மேளனங்களின் கூட்டமைப்பு (UFBU) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த 2024 மார்ச் 8-ஆம் தேதி கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி, வாரத்தில் 5 நாட்கள் வங்கி வேலை திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக இந்திய வங்கிகள் சங்கம் (IBA) மற்றும் மத்திய நிதிச் சேவைகள் துறை (DFS) ஆகியவற்றுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. துணை தலைமை தொழிலாளர் ஆணையர் தலைமையில் டெல்லியில் நடைபெற்ற இந்த சமரசப் பேச்சுவார்த்தையில் எவ்வித சாதகமான முடிவும் எட்டப்படவில்லை.
இதன் காரணமாக, திட்டமிட்டபடி செப்டம்பர் 28, 29 மற்றும் 30 ஆகிய மூன்று தேதிகளில் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க முடிவெடுத்துள்ளதாக UFBU வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. AIBEA, AIBOC, NCBE, AIBOA, BEFI, INBEF, INBOC உள்ளிட்ட 7 முன்னணி வங்கித் தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் அனைவரும் இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தகுதிகாண் பருவத்தில் (Probation) உள்ள ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெறவுள்ள ஊழியர்கள் அனைவரும் அச்சமின்றி வேலைநிறுத்தத்தில் பங்கேற்கலாம் என்றும், வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நிர்வாகங்கள் ஒழுங்கு நடவடிக்கை எச்சரிக்கை விடுப்பது தொழிலாளர் நலச் சட்டத்திற்கு எதிரானது என்றும் சுற்றறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. தொடர் வேலைநிறுத்தம் காரணமாக புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
📸 புகைப்படத் தொகுப்பு (Photo Gallery)




