மத்திய அமைச்சர் எல். முருகனை சந்தித்த தில்லி தமிழ் மாணவர்கள் சங்க புதிய நிர்வாகிகள்!

புதுதில்லி: தில்லி தமிழ் மாணவர்கள் சங்கத்திற்கு (DTSA) புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகக் குழு உறுப்பினர்கள், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகனை புதுதில்லியில் நேரில் சந்தித்துப் பேசினர்.
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற இந்த மரியாதை நிமித்தமான சந்திப்பின்போது, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள நிர்வாகக் குழுவினர் மத்திய அமைச்சரிடம் வாழ்த்துப் பெற்றனர். அப்போது டெல்லியில் பயின்று வரும் தமிழ் மாணவ, மாணவிகளின் கல்வி நலன்கள், சங்கத்தின் எதிர்காலச் செயல்பாடுகள் மற்றும் தமிழ்ச் சமூகம் சார்ந்த முன்னெடுப்புகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
புதிய பொறுப்பாளர்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்த மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன், மாணவர்கள் தங்களின் உயர்கல்வி மற்றும் தொழில்முறை வளர்ச்சியில் சிறந்து விளங்கி நாட்டிற்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என ஊக்கமளித்தார்.


