புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் புராஜெக்ட் நர்ஸ் பணி: ரூ.20,000 ஊதியத்தில் நேரடித் தேர்வு அறிவிப்பு!
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் சிறுநீரகவியல் (Nephrology) துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மருத்துவ ஆய்வுத் திட்டத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக ‘புராஜெக்ட் நர்ஸ்’ (Project Nurse) பணியிடத்தை நிரப்ப தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பணிக்கு பி.எஸ்சி நர்சிங் (B.Sc. Nursing) முடித்திருக்க வேண்டும். மருத்துவ ஆய்வுகளில் (Clinical Trials) ஒரு வருட அனுபவம் மற்றும் கணினி தரவுப் பதிவேற்றத் திறன் கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவருக்கு மாதந்தோறும் ஒருங்கிணைந்த ஊதியமாக ரூ.20,000 வழங்கப்படும். பணிக்காலம் 12 மாதங்கள் ஆகும்.
இப்பணிக்கான நேரடித் தேர்வு மற்றும் நேர்காணல் வரும் 29-09-2026 அன்று நடைபெற உள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் தங்களது பிறப்புச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், கல்வி மற்றும் அனுபவச் சான்றிதழ்கள் மற்றும் சுயவிவரக் குறிப்புடன் (CV) ஜிப்மர் சிறுநீரகவியல் துறைக்கு அன்று காலை 9.00 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அன்று மதியம் 2.00 மணிக்கு நேர்காணல் நடத்தப்படும். தேர்வு செய்யப்படுபவர்கள் 01-10-2026-க்குள் பணியில் இணைய வேண்டும் என்று ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
