புதுடெல்லியில் 9-வது இந்திய சர்வதேச நீர் வார மாநாடு: ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்!

புதுடெல்லி: தலைநகர் புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற 9-வது ‘இந்திய சர்வதேச நீர் வார மாநாடு 2026’ (India International Water Week) நிகழ்வை சி.பி. ராதாகிருஷ்ணன் முறைப்படி தொடங்கி வைத்தார். “காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையிலான நீர் மேலாண்மை” (Climate Resilient Water Management) என்ற முதன்மை மையக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த சர்வதேச மாநாடு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல், மத்திய இணையமைச்சர்கள் வி. சோமண்ணா, ராஜ் பூஷன் சவுத்ரி, துறைசார் உயர் அதிகாரிகள் மற்றும் உள்நாடு, வெளிநாடுகளைச் சேர்ந்த நீர் மேலாண்மை வல்லுநர்கள், பிரதிநிதிகள் எனப் பலரும் திரளாகக் கலந்துகொண்டனர்.
இம்மாநாட்டின் முக்கிய நிகழ்வாக, ‘நிலையான நகர்ப்புற நதிகள் மேலாண்மை’ (SURM) கட்டமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு / மெஷின் லேர்னிங் (AI/ML) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட ஒருங்கிணைந்த நீர்த்தேக்க வண்டல் மேலாண்மை திட்டம் ஆகியவை தொடங்கி வைக்கப்பட்டன. நவீன தொழில்நுட்பத்தின் துணையுடன் காலநிலை மாற்ற சவால்களை எதிர்கொண்டு, நீர்நிலைகளைப் பாதுகாக்கும் முக்கிய முன்னெடுப்பாக இது அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


