ஐஐடி மாணவர் தற்கொலைகளில் 62% பேர் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர்: மத்திய அரசுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. கண்டனம்!

நாட்டின் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களான ஐஐடி-களில் (IIT) கடந்த 5 ஆண்டுகளில் உயிரிழந்த மாணவர்களில் 62 சதவீதத்துக்கும் அதிகமானோர் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சித் தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் சுட்டிக்காட்டி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஐஐடி-களில் கடந்த 5 ஆண்டுகளில் நிகழ்ந்த 53 மாணவர் மரணங்களில் 45 பேர் தற்கொலை செய்துகொண்டவர்கள் ஆவர். இதில் 28 மாணவர்கள் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பது மிகுந்த வேதனையளிக்கிறது. இந்தத் தரவுகள் உயர்கல்வித் துறையிடம் இருந்தபோதிலும், நாடாளுமன்றத்தில் முறையாக முன்வைக்கப்படாமல் மறைக்கப்பட்டுள்ளது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், விளிம்புநிலை மாணவர்களுக்கு சமத்துவமான, பாதுகாப்பான மற்றும் பாகுபாடற்ற கல்விச் சூழலை உருவாக்க வேண்டியது அரசின் தலையாய கடமை என்றும், மாணவர் சாஹில் வாகோடேவின் மரணம் உள்ளிட்ட சம்பவங்களில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய மோடி அரசு தெளிவான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.



