புதுச்சேரியில் குடிநீர் கட்டண உயர்வுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்: நாரா கலைநாதன் எச்சரிக்கை!
புதுச்சேரி அரசு அறிவித்துள்ள கடுமையான குடிநீர் கட்டண உயர்வுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இதனை உடனே மறுபரிசீலனை செய்யாவிட்டால் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ.-வும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினருமான நாரா கலைநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“புதுவை மாநில அரசு குடிநீர் விநியோகத் திட்டத்திற்காக புதிய கொள்கையை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் இருந்த அரசாணைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. புதிய விதிகளின்படி, வீட்டு உபயோகத்திற்கான குடிநீர்க் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ.3-லிருந்து ரூ.5 ஆக அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. காலாண்டுக்கு 90 யூனிட் வரை 3 மாதங்களுக்கான கட்டணம் ரூ.270-லிருந்து ரூ.720 ஆக பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.”
மேலும் வர்த்தக நிறுவனங்கள், உணவகங்களுக்கான குடிநீர் கட்டணங்களும் மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குடிநீர் இணைப்புக்கான கட்டணங்களில், புதிய இணைப்புக்கு ரூ.1,000 என்றும், மறு இணைப்புக்கு ரூ.2,000 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வீடுகளுக்கான வைப்புத் தொகை ரூ.500 ஆகவும், வணிக நிறுவனங்களுக்கு ரூ.10,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மக்களுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீரை தடையின்றி வழங்குவதில் தொடர்ந்து குளறுபடிகளே நிலவி வருகின்றன. விநியோகச் சீர்கேடுகளைக் கண்காணித்து சரிசெய்வதற்குப் பதிலாக, மக்கள் மீது கூடுதல் வரிச் சுமையை ஏற்றுவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. எனவே, உத்தேச குடிநீர் கட்டண உயர்வை புதுச்சேரி அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்; தவறினால் மக்களைத் திரட்டி தீவிரப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று நாரா கலைநாதன் எச்சரித்துள்ளார்.

