புதுச்சேரி தேர்தலில் ஒரு ரூபாய் கூட செலவு செய்யாத த.வெ.க.: தேர்தல் ஆணைய அறிக்கையால் பரபரப்பு!
புதுச்சேரி, செப். 30:
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) சார்பில் தலைமை அளவில் ஒரு ரூபாய் கூட செலவிடப்படவில்லை என தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்டுள்ள செலவு கணக்கு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள மொத்தம் 30 சட்டமன்றத் தொகுதிகளில் த.வெ.க. 28 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், 15 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. இந்த தேர்தலில் கட்சி மொத்தமாக 17.6 சதவீத வாக்குகளைப் பெற்றது. இந்நிலையில், தேர்தல் செலவு தொடர்பாக கட்சியின் பொருளாளர் வெங்கடரமணன் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் பல்வேறு முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
அதில், பொதுக்கூட்டங்கள், பேரணிகள், பிரச்சாரப் பொருட்கள், ஊடக விளம்பரங்கள், பயணங்கள் மற்றும் வேட்பாளர்களுக்கான உதவித் தொகை உள்ளிட்ட எந்தவொரு செலவினத்திற்கும் கட்சித் தலைமை சார்பில் நிதி ஒதுக்கப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் விஜய் புதுவையில் இரண்டு இடங்களில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போதிலும், அதற்கான செலவுகளைக் கட்சித் தலைமையகம் ஏற்கவில்லை என்றும், உள்ளூர் அமைப்புகளே கவனித்துக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே சமயம், தேர்தல் காலகட்டத்தில் கட்சிக்கு ரூ.7.02 கோடி வருவாய் கிடைத்ததாகவும், ஆரம்பத்தில் ரூ.3.02 கோடி வங்கிக் கணக்கில் இருப்பு இருந்ததாகவும் கணக்கு காட்டப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க. சார்பில் ரூ.19.81 கோடி வரை செலவிடப்பட்டிருந்த நிலையில், புதுச்சேரி தேர்தல் பிரச்சாரத்திற்கு தலைமை மட்டத்தில் ‘ஜீரோ செலவு’ எனக் கணக்கு சமர்ப்பிக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

