புதுச்சேரியில் லிப்ட் கேட்ட பெண் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளை சிறையிலடைக்கக் கோரி சட்டசபையில் நேரு எம்.எல்.ஏ. அதிரடி தர்ணா!

புதுச்சேரி: புதுச்சேரி நகரப் பகுதியில் லிப்ட் கேட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கடுமையான தண்டனை பெற்றுத் தரக் கோரியும் சட்டப்பேரவை வளாகத்தில் நேரு எம்.எல்.ஏ. பொதுமக்களுடன் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
புதுச்சேரியில் லிப்ட் கேட்ட பெண் ஒருவரை மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்று, அம்பலத்தடையார் மடத்து வீதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் அடைத்து வைத்துள்ளனர். அங்கு அப்பெண்ணின் ஆடைகளைப் பறித்து சிலர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நள்ளிரவில் காமுகர்களிடம் இருந்து தப்பித்து அப்பெண் ஓடிவந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பெரியகடை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும், இக்கொடூர குற்றத்தில் பலருக்கு தொடர்பு இருப்பதாகவும், அதனை மறைக்க காவல்துறை முயற்சிப்பதாகவும் பொதுமக்கள் தரப்பில் கடும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், நேயம் மக்கள் கழகத் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான நேரு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கோரி பொதுமக்களுடன் சட்டசபைக்கு திரண்டு வந்தார். பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களின் தடையை மீறி சட்டசபைக்குள் நுழைந்த அவர்கள், மைய மண்டபத்திற்கு செல்லும் படிக்கட்டுகளில் அமர்ந்து அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த தற்காலிக சபாநாயகர் அன்பழகன் பேச்சுவார்த்தை நடத்த முயன்றார். ஆனால் அப்பேச்சுவார்த்தை காரசாரமான வாக்குவாதமாக மாறியதால் அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். சுமார் 45 நிமிடங்களுக்கும் மேலாக இந்த உள்ளிருப்புப் போராட்டம் நீடித்தது.
தர்ணா போராட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நேரு எம்.எல்.ஏ., “புதுச்சேரியில் ஏழைப் பெண் ஒருவருக்கு அதீத அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சிறையில் அடைப்பதுடன், ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து மிகக் கடுமையான தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு உடனடியாக ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவதோடு, அவருக்கு தன்னம்பிக்கையையும் உரிய மனநல ஆலோசனைகளையும் வழங்க வேண்டும். புதுவையில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்கதையாகி வருவது சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளதையே காட்டுகிறது” என்று தெரிவித்தார்.

