புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ‘விருந்தோம்பல் மேலாண்மையில் MBA’ படிப்பு அறிமுகம்
புதுச்சேரி, ஆக. 22: புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் மேலாண்மைப் பள்ளியின் சுற்றுலா ஆய்வுகள் துறையில், புதிய ‘விருந்தோம்பல் மேலாண்மையில் MBA’ (MBA in Hospitality Management) படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவைத் தொடங்கி வைத்துப் பேசிய துணைவேந்தர் பேராசிரியர் பி. பிரகாஷ் பாபு, விருந்தோம்பல் துறையில் மேலாண்மை வல்லுநர்களுக்கான தேவை அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டினார். புதுச்சேரியின் சுற்றுலா முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, இந்தப் படிப்பை பல்கலைக்கழகத்தின் பிற வளாகங்களிலும் விரிவுபடுத்த விருப்பம் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மேலாண்மைப் பள்ளி முதல்வர் பேராசிரியர் பி. நடராஜன் தலைமை உரையாற்றினார். இதில் சிறப்பு விருந்தினர்களாக ரேடிசன் ரிசார்ட் பாண்டிச்சேரி பே-யின் மூத்த பொது மேலாளர் உமா மகேஸ்வரி மற்றும் புதுச்சேரி சுற்றுலா அபிவிருத்திக் கழகத்தின் துணைப் பொது மேலாளர் ஆஷா குப்தா ஆகியோர் கலந்துகொண்டு, கல்வி மற்றும் தொழில் துறை இடையிலான ஒத்துழைப்பின் அவசியத்தை வலியுறுத்தினர்.
சுற்றுலா ஆய்வுகள் துறைத் தலைவர் பேராசிரியர் சிபி பி.எஸ். வரவேற்புரை நிகழ்த்தினார். நடைமுறைப் பயிற்சிகள் மற்றும் தொழில் அனுபவங்களை உள்ளடக்கிய இந்த புதிய பாடத்திட்டம், மாணவர்களை விருந்தோம்பல் சேவைத் துறையில் சிறப்பான மேலாளர்களாக உருவாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

