சபாநாயகர் பொறுப்பில் இருப்பவர் தேர்தல் பிரச்சாரம் செய்யலாமா? புதுச்சேரி திமுக அமைப்பாளர் இரா. சிவா கேள்வி!

புதுச்சேரி:
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சேதுசெல்வத்தை ஆதரித்து திலகர் நகர் மற்றும் வி.வி.பி. நகர் உள்ளிட்ட பகுதிகளில் திமுக தேர்தல் பொறுப்பாளர் எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி., மாநில அமைப்பாளர் இரா. சிவா, விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் டாக்டர் ஆ. இலட்சுமணன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. வி.வி.பி. நகரில் வசிக்கும் புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் பேராசிரியர் மு. ராமதாஸை சந்தித்து திமுக தலைவர்கள் ஆதரவு கோரினர். இந்த பிரச்சாரத்தில் வானூர் எம்.எல்.ஏ. கொளதம் திராவிடமணி, முன்னாள் எம்.எல்.ஏ. மாசிலாமணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
வாக்கு சேகரிப்பின்போது செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்பாளர் இரா. சிவா, அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தற்காலிக சபாநாயகர் பொறுப்பில் நீடிக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது என்றார். அப்படி பொறுப்பில் இருந்தால் அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடலாமா என்ற கேள்வியை எழுப்பிய அவர், முதல்வர் ரங்கசாமி நிரந்தர சபாநாயகர் பதவியை வழங்க மாட்டாரோ என்ற அச்சத்தில் அன்பழகன் களமிறங்கியுள்ளதாக விமர்சித்தார். சபாநாயகர் பதவியின் மாண்பையும் கண்ணியத்தையும் அவர் காப்பாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசு பொறுப்பேற்று பல மாதங்கள் கடந்த பிறகே அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன என்றும், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகும் அரசின் கொள்கை என்னவென்று இதுவரை அமைச்சரவையைக் கூட்டி தெளிவுபடுத்தவில்லை என்றும் குற்றம்சாட்டினார். முதல்வரும் துணைநிலை ஆளுநரும் புதுச்சேரியில் நாடகமாடி மன்னராட்சி நடத்தி வருவதாக அவர் சாடினார்.
மேலும், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தட்டாஞ்சாவடியில் 3 கொலைகளும், பெரியார் நகரில் ஒரு கொலையும் என புதுச்சேரி முழுவதும் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக இரா. சிவா குற்றம்சாட்டினார். மக்கள் மாற்றத்தை விரும்புவதால் தட்டாஞ்சாவடி தொகுதியில் திமுக வேட்பாளர் சேதுசெல்வம் அமோக வெற்றி பெறுவார் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

