லிங்காரெட்டிபாளையத்தில் ‘சேவா சங்கல்ப அபியான்’ நிகழ்வு: தூய்மைப் பணியாளர்களுக்குப் பட்டுப்புடவை வழங்கி சிறப்பு கௌரவம்!

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் வட்டம், மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட லிங்காரெட்டிபாளையம் பகுதியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவையை போற்றும் வகையில் ‘சேவா சங்கல்ப அபியான்’ மற்றும் அங்கன்வாடி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
லிங்காரெட்டிபாளையம் பிள்ளையார் கோவில் அருகில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் இந்த சிறப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்ற அங்கன்வாடி திருவிழா மிகுந்த உற்சாகத்துடனும் விமரிசையாகவும் கொண்டாடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் சேவை மனப்பான்மையை விளக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு செயல்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.
தொடர்ந்து, பிரதமரின் தூய்மை இந்தியா மற்றும் மக்கள் சேவை வேண்டுகோளுக்கிணங்க, கிராமப் பகுதியை எப்போதும் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்க அயராது பாடுபடும் தூய்மைப் பணியாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் அப்பகுதியில் பணியாற்றும் இரண்டு பெண் தூய்மைப் பணியாளர்களுக்குச் சிறப்பு மரியாதை செலுத்தப்பட்டது.
அவர்களின் தன்னலமற்ற மகத்தான சேவையைப் பாராட்டி, அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தப்பட்டதுடன் பழங்கள், சத்தான உணவுப் பொருட்கள் மற்றும் பட்டுப்புடவைகள் வழங்கி மனதார கௌரவிக்கப்பட்டனர். அடித்தட்டு மக்களின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
