புதுச்சேரி

தேசிய அளவில் புதுச்சேரி மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரிக்கு 5 உயரிய விருதுகள் குவிந்தன

புதுச்சேரி, செப். 29:

புதுச்சேரி மதகடிப்பட்டில் இயங்கி வரும் ஸ்ரீ மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி, உயர்கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையில் ஆற்றி வரும் சீரிய பணிகளைப் பாராட்டி, தேசிய அளவில் 5 முதன்மை விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற ‘எடுஸ்கில்ஸ்’ (EduSkills) அறக்கட்டளை சார்பில் தேசிய அளவிலான வருடாந்திர கல்வி மாநாடு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மிக விமரிசையாக நடைபெற்றது. இம்மாநாட்டில் நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களின் தலைவர்கள், தொழில்துறை வல்லுநர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை பிரதிநிதிகள் திரளாகப் பங்கேற்றனர்.

இம்மாநாட்டில், மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துதல், தொழில்துறைக்குத் தேவையான நடைமுறைப் பயிற்சிகளை வழங்குதல் மற்றும் கல்வி நிறுவன – தொழில்துறை இடையேயான தொடர்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டதற்காக, மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரிக்கு ‘தேசிய அளவிலான சிறந்த செயல்திறன் மிக்க பொறியியல் கல்லூரி’ விருது வழங்கப்பட்டது. அத்துடன், எடுஸ்கில்ஸ் அமைப்புடன் இணைந்து கல்வித் தரத்தை உயர்த்தியதற்காக ‘ஐந்தாண்டு கூட்டாண்மை விருது’ வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

கல்வி நிறுவனத்தை நவீன தொலைநோக்குப் பார்வையுடன் வழிநடத்தி வரும் கல்லூரி இயக்குநர் வெங்கடாஜலபதிக்கு ‘இயக்குநர் சிறப்புத் திறன் விருது – 2026’ மற்றும் ‘தொலைநோக்குப் பார்வையுடைய கல்வித் தலைவர் விருது’ ஆகிய இரு முக்கிய தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், கல்லூரியின் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் (AI & Data Science) துறைத் தலைவர் மதுசூதனன், திறன் மேம்பாட்டுத் திட்டங்களைச் சிறப்பாக ஒருங்கிணைத்தமைக்காக ‘சிறந்த ஒருங்கிணைப்பாளர்’ விருதினைப் பெற்றார்.

ஒரே மாநாட்டில் மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி மற்றும் அதன் பேராசிரியர்களுக்கு 5 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது புதுச்சேரி கல்வித் துறைக்கு பெருமை சேர்த்துள்ளது. தேசிய விருதுகளை வென்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்த இயக்குநர், துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர்களை மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் தனசேகரன், பொருளாளர் ராஜராஜன், இணைச் செயலாளர் வேலாயுதம் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் நேரில் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன