சென்னை: விமான நிலைய தனியார் டாக்ஸி ஓட்டுநர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர்!

சென்னை:
சென்னை விமான நிலைய தனியார் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஓட்டுநர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாரதிய ஜனதா கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சென்னை விமான நிலைய தனியார் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கத்தின் தலைவர் முருகன், பொதுச் செயலாளர் உதயகுமார் மற்றும் பொருளாளர் சேகர் ஆகியோரின் தலைமையில் ஓட்டுநர்கள் திரளாகக் கலந்துகொண்டு பாஜகவில் இணைந்தனர்.
பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் புதியதாக இணைந்த உறுப்பினர்களைக் கட்சி சால்வை அணிவித்து முறைப்படி வரவேற்றார். தொடர்ந்து பேசிய அவர், “பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நல்லாட்சி மற்றும் மக்கள் நலன் சார்ந்த தொலைநோக்குப் பணிகளால் ஈர்க்கப்பட்டு, அவரது தலைமையை ஏற்று தமிழக பாஜகவில் இவர்கள் இணைந்துள்ளனர். மக்கள் சேவையை தங்களது முதன்மை நோக்கமாகக் கொண்டு, கட்சியின் வளர்ச்சிக்கும், தமிழக மக்களின் முன்னேற்றத்திற்கும் சிறப்பாகப் பணியாற்றிட வேண்டும்” என்று வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தமிழக பாஜக தேசிய மொழிகள் பிரிவு மாநில அமைப்பாளர் ஜெயக்குமார், மாநில இளைஞரணி தலைவர் எஸ். ஜி. சூர்யா, வழக்கறிஞர் கே. எஸ். ராதாகிருஷ்ணன் மற்றும் மாநிலச் செயலாளர் சதீஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.


