புதுச்சேரி

புதுச்சேரியில் மக்கள் அச்சமின்றி வாழும் நிலையை ஏற்படுத்துங்கள்: தாமரை கண்ணன் வலியுறுத்தல்

புதுச்சேரியில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தி, பொதுமக்கள் அச்சமின்றி வாழும் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று இந்திய தேசிய இளைஞர் முன்னணி பொதுச்செயலாளர் தாமரை கண்ணன் புதுச்சேரி அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரியில் தொடர்ந்து நடைபெறும் கொலை மற்றும் கொள்ளை உள்ளிட்ட அடுத்தடுத்த குற்றச் சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வேதனையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. அமைதியான மாநிலமாகத் திகழ வேண்டிய புதுச்சேரியில், மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகி வருவது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. குற்றங்களைத் தடுப்பதிலும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் மெத்தனம் காட்டும் புதுச்சேரி அரசையும் காவல்துறையையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மேலும், இத்தகைய குற்றச் சம்பவங்களின் பின்னணியில் போதைப்பொருள் பயன்பாடும் தாராளப் புழக்கமும் முக்கியக் காரணியாக இருக்கக்கூடும் என்ற பொதுவான கவலை மக்களிடையே எழுந்துள்ளது. குற்றங்கள் நிகழ்ந்த பின்னர் வெறும் கைது நடவடிக்கையோடு முடித்துக் கொள்ளாமல், குற்றங்கள் நடப்பதற்கு முன்பே தடுக்கும் விதமாக உளவுத்துறை தகவல்களைச் சேகரிக்கும் பணியையும், கண்காணிப்பு வளையத்தையும் காவல்துறை தீவிரப்படுத்த வேண்டும்.

எனவே, புதுச்சேரி அரசும் காவல்துறையும் சட்டம் ஒழுங்கு மற்றும் போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக உடனடியாக அவசர உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி, காலக்கெடுவுடன் கூடிய ஒருங்கிணைந்த செயல்திட்டத்தை அறிவித்து போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும். பள்ளி, கல்லூரிகள், தங்கும் விடுதிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் போதைப்பொருள் நடமாட்டத்தைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். அத்துடன், அண்டை மாநில காவல்துறையினருடன் இணைந்து எல்லைப் பகுதிகளில் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு மக்கள் அச்சமின்றி வாழ அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன