புதுச்சேரியில் பேனர், கட்-அவுட் வைக்க அதிரடி தடை: மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் எச்சரிக்கை
புதுச்சேரி, 29/09/2026:
புதுச்சேரி மாநிலத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பு கருதி பேனர்கள், கட்-அவுட்டுகள் மற்றும் விளம்பரப் பலகைகள் வைக்க முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று (செப்டம்பர் 29) முதல் உடனடியாக அமலுக்கு வருவதாக மாவட்ட ஆட்சியர் அ.குலோத்துங்கன் அறிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை காலத்தில் பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக சாலை ஓரங்களில் வைக்கப்படும் பிரம்மாண்ட பேனர்கள் மற்றும் விளம்பர பலகைகள் சரிந்து விழுந்து பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வடகிழக்கு பருவமழை காலம் முடிவடையும் வரை அனைத்து விதமான பேனர்கள், கட்-அவுட்டுகள் மற்றும் தற்காலிக விளம்பர தட்டிகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடையை மீறி யாரேனும் அனுமதியின்றி பேனர்களையோ விளம்பரப் பலகைகளையோ வைத்தால், அவர்கள் மீது பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் கடுமையான குற்றவியல் நடவடிக்கை பாயும் என மாவட்ட ஆட்சியர் திட்டவட்டமாக எச்சரித்துள்ளார். மேலும், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் உடனடியாக களமிறங்கி ஏற்கனவே உள்ள சட்டவிரோத பேனர்களை அகற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.



