புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற முதல்வருக்கு மனமில்லை; ₹20 கோடி நிவாரண நிதி மோசடி: திமுக அமைப்பாளர் இரா.சிவா கடும் குற்றச்சாட்டு!

புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத்தர முதலமைச்சர் ரங்கசாமிக்கு துளியும் விருப்பமில்லை என்றும், அதிகாரம் தேவைப்படும் போதெல்லாம் அவர் அந்த அஸ்திரத்தைக் கையில் எடுத்து மக்களை ஏமாற்றி வருவதாகவும் திமுக மாநில அமைப்பாளர் இரா. சிவா குற்றம்சாட்டியுள்ளார்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி திமுக வேட்பாளர் சேதுசெல்வத்தை ஆதரித்து, திமுக துணைப் பொதுச்செயலாளர் க. பொன்முடி, மாநில அமைப்பாளர் இரா. சிவா, விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் மருத்துவர் பொன். கௌதமசிகாமணி மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதி பொறுப்பாளர் டாக்டர் நித்தீஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பொய்யாக்குளம் மற்றும் வினோபா நகர் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்து வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து லட்சுமி நகர் பகுதியில் வீடு வீடாகச் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கோரப்பட்டன.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக மாநில அமைப்பாளர் இரா. சிவா, “தேர்தல் வரும் போதெல்லாம் மாநில அந்தஸ்து பெறுவோம் என்று முதல்வர் ரங்கசாமி பேசுவார். தேர்தல் முடிந்த பிறகு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பிவிட்டு அமைதியாகி விடுவார். அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமர் மற்றும் ஒன்றிய அமைச்சர்களைச் சந்தித்து மாநில அந்தஸ்தை வலியுறுத்துவோம் என்று கூறுவாரே தவிர, அடுத்தகட்ட ஆக்கப்பூர்வ நடவடிக்கை எதையும் எடுக்க மாட்டார். மீண்டும் தேர்தல் வரும்போது, அதிகாரம் தேவைப்படும் போது மட்டுமே மாநில அந்தஸ்து என்ற அஸ்திரத்தைக் கையில் எடுப்பார். அப்படித்தான் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலிலும் மக்களை ஏமாற்றுகிறார்” என்று தெரிவித்தார்.
மேலும் முதலமைச்சர் நிவாரண நிதியில் முறைகேடு நடந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், “முதலமைச்சர் நிவாரண நிதி வழங்கியதில் சுமார் ₹20 கோடி வரை மிகப்பெரிய மோசடி நடைபெற்றுள்ளது. இதில் முதலமைச்சர் அலுவலகத்தில் உள்ள ஒரு நபரே நேரடியாக ஈடுபட்டுள்ளார். பொதுமக்களிடமிருந்து அனைத்து ஆவணங்களையும் பெற்று, கையொப்பம் வாங்கிக்கொண்டு நிவாரணத் தொகையை வழங்காமல் ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.


