புதுச்சேரி

புதுச்சேரி ரோமன் ரோலண்ட் நூலகத்தில் அமைச்சர் பெ.ராஜவேலு திடீர் ஆய்வு: வாசகர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்!

புதுச்சேரி:

புதுச்சேரி அரசின் கலைப்பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க ரோமன் ரோலண்ட் நூலகத்தில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் கலைப்பண்பாட்டுத் துறை அமைச்சர் பெ.ராஜவேலு நேரில் சென்று விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, நூலகத்தில் உள்ள பொதுப் புத்தகப் பிரிவுகள், நாளிதழ் மற்றும் பருவ இதழ்கள் வாசிப்புப் பகுதி, குறிப்புப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, அங்கு வாசிப்பில் ஈடுபட்டிருந்த வாசகர்கள், முதியவர்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவ, மாணவிகளிடம் நூலகத்தின் செயல்பாடுகள் குறித்து நேரடியாகக் கலந்துரையாடினார்.

அப்போது நூலகத்தில் உள்ள அடிப்படை வசதிகள், குடிநீர் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு, புதிய புத்தகங்களின் இருப்பு ஆகியவை குறித்து வாசகர்களிடம் கேட்டறிந்த அமைச்சர், அவர்களின் கோரிக்கைகளையும் குறைகளையும் கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். குறிப்பாக, வாசகர்களின் வசதிக்காக நூலகச் சூழலைத் தூய்மையாகவும் செம்மையாகவும் பராமரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் கல்வித் தேவைக்கு ஏற்ப போட்டித் தேர்வு நூல்கள் மற்றும் புதிய தலைமுறைக்கான தகவல் தொடர்பு வசதிகளைத் தொடர்ந்து மேம்படுத்த வேண்டும் எனத் துறை அலுவலர்களுக்கு அமைச்சர் பெ.ராஜவேலு அறிவுறுத்தினார்.

இந்த கள ஆய்வின் போது, கலைப்பண்பாட்டுத் துறை இயக்குனர் சக்திவேல், கண்காணிப்பாளர் அருள்ராஜ் மற்றும் நூலக அலுவலர்கள், பணியாளர்கள் உடனிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன