பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள்: ராஜ்பவன் தொகுதியில் சத்துணவு வழங்கி ‘சேவா சங்கல்ப அபியான்’ நிகழ்ச்சி!

புதுச்சேரி: பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்தநாள் மற்றும் அவரது 25 ஆண்டுகால மக்கள் சேவையை முன்னிட்டு, புதுச்சேரி ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட அங்காளம்மன் செங்கேணி அம்மன் கோவில் வளாகத்தில் ‘சேவா சங்கல்ப அபியான்’ மக்கள் நல சேவை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
பாஜக முக்கிய பிரமுகர் வி.பி. ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அங்கன்வாடி ஊழியர்கள், தாய்மார்கள் மற்றும் பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த சத்தான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. சமுதாயத்தில் பின்தங்கிய மற்றும் அடித்தட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த உதவிகள் வழங்கப்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து, மத்திய பாஜக அரசு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த 25 ஆண்டுகளாக பொதுவாழ்வில் ஆற்றி வரும் மக்கள் நலப் பணிகள், தாய்மார்கள், குழந்தைகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாஜக தேசிய மகளிர் அணி செயற்குழு உறுப்பினர் பிந்து சுரேஷ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். மேலும் நிகழ்ச்சிப் பொறுப்பாளர்கள் தாமரைச்செல்வி, மகேஷ் ரெட்டி ஆகியோருடன் தொகுதி நிர்வாகிகள், மகளிர் அணியினர் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.


