புதுச்சேரி

புதுச்சேரியில் பெண்ணின் ஆடைகளை திருடி தொல்லை கொடுத்த நபர் கைது: முதலியார்பேட்டை போலீசார் அதிரடி!

புதுச்சேரி: புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியில் பெண் ஒருவருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி அவரது ஆடைகளை திருடி தகாத செயலில் ஈடுபட்ட நபரை முதலியார்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி முதலியார்பேட்டை சிங்கிடி நாயக்கர் தெருவைச் சேர்ந்த ஜெயந்தி என்ற பெண், தனது வீட்டின் ஆடைகளை அடையாளம் தெரியாத நபர் எடுத்துச் சென்று தவறாகப் பயன்படுத்துவதாகவும், மனநலம் பாதிக்கப்பட்ட நபர் போன்று தனக்கு தொடர் அச்சுறுத்தல் அளித்து வருவதாகவும் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு புகார் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, முதலியார்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் இனியன், சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளியைத் தேடி வந்தனர். தீவிர கண்காணிப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையின் பலனாக, இச்சம்பவத்தில் ஈடுபட்ட முதலியார்பேட்டை உடையார்தோட்டம் 3-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் வேணு (44) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

காவல்துறையினரின் விசாரணையில், குற்றம்சாட்டப்பட்ட வேணு மது அருந்திவிட்டு பக்கத்து வீட்டில் இருந்த பெண்ணின் துணிகளை எடுத்துச் சென்று, பாழடைந்த கட்டடத்தில் பரப்பி வைத்தும், உள்ளாடைகளை தொங்கவிட்டும் அப்பெண்ணின் பெண்மைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் வக்கிர செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து முதலியார்பேட்டை போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா (BNS 2023) சட்டப்பிரிவுகள் 329(4) மற்றும் 79 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட வேணுவை புதுச்சேரி 4-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதியின் உத்தரவின் பேரில் அவர் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன