தட்டாஞ்சாவடி தொகுதி 20 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது: தேர்தல் பிரச்சாரத்தில் திமுக அமைப்பாளர் இரா. சிவா குற்றச்சாட்டு!

புதுச்சேரி: புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சேதுசெல்வத்தை ஆதரித்து அக்கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் 31 பூத்துகளிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வினோபா நகர், விநாயக முருகன் நகர் மற்றும் லட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் திமுக அமைப்பாளர் இரா. சிவா தலைமையில் நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரித்தனர்.
இந்த தேர்தல் களத்தில் தேர்தல் பொறுப்பாளர் எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி., திமுக துணைப் பொதுச்செயலாளர் க. பொன்முடி, எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச். நாஜிம், விழுப்புரம் மாவட்டச் செயலாளர்கள் மருத்துவர் ஆ. இலட்சுமணன் எம்.எல்.ஏ., மருத்துவர் பொன் கெளதமசிகாமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் இரா. செந்தில்குமார், வே. கார்த்திகேயன், அ. செந்தில் (எ) ரமேஷ், விக்னேஷ் கண்ணன், கெளதம் திராவிடமணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வி. அனிபால்கென்னடி, எல். சம்பத், பூ. மூர்த்தி, நந்தா. டி. சரவணன் மற்றும் தொகுதி பொறுப்பாளர் டாக்டர் ரோ. நித்திஷ் ஆகியோர் களமிறங்கி வாக்கு சேகரித்து வருகின்றனர்.
பிரச்சாரத்தின் போது திமுக அமைப்பாளர் இரா. சிவா பேசுகையில், “தட்டாஞ்சாவடி தொகுதியை முதலமைச்சரின் தொகுதி என்று பெருமையாகக் கூறுகிறார்கள். ஆனால், உண்மை என்னவென்றால் அந்த தொகுதிதான் கடந்த 20 ஆண்டுகளாக அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படாமல் பின்னோக்கிச் சென்றுள்ளது. அப்படிப்பட்ட தட்டாஞ்சாவடி தொகுதியை வளர்ச்சிப் பாதையில் செலுத்தி ஒரு முன்மாதிரி தொகுதியாக மாற்றும் வல்லமை திமுக வேட்பாளர் சேதுசெல்வத்திற்கு மட்டுமே உண்டு.”
மேலும் அவர் பேசுகையில், “புதுச்சேரி சட்டமன்றத்தில் தற்போதுள்ள 5 திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுங்கட்சியின் தவறுகளைத் தட்டிக்கேட்டு மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். சேதுசெல்வத்தையும் நீங்கள் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுத்து அனுப்பினால், மக்களின் குரல் இன்னும் கம்பீரமாக ஒலிக்கும். தொடர்ந்து நிகழும் கொலை, கொள்ளைச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தவும், தடையில்லா மின்சாரம் மற்றும் சீரான குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைப் பெற்றுத் தரவும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.


