அரசியல்

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் தவெக ‘தூய சக்தி’ என உரிமை கொண்டாட முடியாது: சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் சாடல்!

புதுச்சேரி, அக். 3:

இடைத்தேர்தல்களில் வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்யும் தமிழக வெற்றிக் கழகம், தங்களைத் தூய்மையான அரசியல் சக்தி என்று கூறிக்கொள்ள எந்தத் தகுதியும் இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஏ.எம். சலீமை ஆதரித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து விரிவாகப் பேசினார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது: “தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளில் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா அதிக அளவில் நடைபெற்று வருகிறது. வழக்கமாகப் பண பலத்தை நம்பும் திமுக, அதிமுக கட்சிகளோடு இணைந்து, தற்போது தமிழக வெற்றிக் கழகமும் வாக்காளர்களுக்குப் பணம் வழங்கி வருகிறது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வாக்குகளைப் பெற முயற்சிக்கும் இத்தகைய நடவடிக்கைகளுக்குப் பிறகு, தவெக ஒருபோதும் தன்னை ‘தூய சக்தி’ என்று உரிமை கொண்டாட முடியாது. இதன் மூலம் அக்கட்சி முன்வைத்த போலி தூய்மை பிம்பம் முற்றிலும் உடைந்து போயுள்ளது.”

மேலும் பேசிய அவர், “இடைத்தேர்தல் நடைபெறும் பகுதிகளில் கள நிலவரம் தங்களுக்குச் சாதகமாக இல்லை என்பதை உணர்ந்ததாலேயே, வழக்கத்திற்கு மாறாகத் தெருத்தெருவாக தீவிரப் பிரச்சாரத்தில் அக்கட்சியினர் இறங்கியுள்ளனர். பண பலத்தையும் அதிகார பலத்தையும் முன்னிறுத்தி தேர்தல் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயல்கள் தீவிரமடைந்து வருகின்றன” என்று குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து புதுச்சேரி அரசியல் சூழல் குறித்துப் பேசிய பெ. சண்முகம், முதலமைச்சர் என். ரங்கசாமியின் அரசியல் அணுகுமுறையைக் கடுமையாகச் சாடினார். “கடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட முதலமைச்சர் என். ரங்கசாமி, மங்கலம் தொகுதியில் வெற்றி பெற்ற பிறகு தட்டாஞ்சாவடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் தற்போது தட்டாஞ்சாவடி தொகுதி மக்கள் மீது தேவையற்ற இடைத்தேர்தல் சுமை திணிக்கப்பட்டுள்ளது. ஒரு தலைவர் இரு தொகுதிகளில் போட்டியிட்டு மக்கள் வரிப்பணத்தையும் ஜனநாயகத்தையும் வீணடிப்பதை ரங்கசாமி போன்ற மூத்த அரசியல் தலைவர்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இந்தத் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் மக்கள் விழிப்புணர்வுடன் வாக்களித்து, ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளருக்கு மகத்தான வெற்றியைத் தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன