புதுச்சேரி

புதுச்சேரி தூய்மைப் பணியாளர்களுக்கு தினசரி குறைந்தபட்ச ஊதியம் ரூ.424 ஆக உயர்வு: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு!

புதுச்சேரி, அக்டோபர் 03: புதுச்சேரி உள்ளாட்சி அமைப்புகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கான தினசரி குறைந்தபட்ச ஊதியம் ரூ.424 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ந. ரங்கசாமி அறிவித்துள்ளார்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புதுச்சேரியில் நடைபெற்ற ‘தூய்மை பாரத தின’ விழாவில் துணைநிலை ஆளுநர் கே. கைலாஷ்நாதனுடன் இணைந்து கலந்துகொண்ட முதலமைச்சர் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். உள்ளாட்சித் துறையின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த தினசரி ஊதியமான ரூ.290, தற்போது ரூ.424 ஆக கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு கடந்த ஜூன் மாதம் முதல் முன்தேதியிட்டு கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் தெளிவுபடுத்தினார்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரி நகரைத் தூய்மையாகவும் அழகாகவும் பராமரிப்பதில் தூய்மைப் பணியாளர்கள் ஆற்றி வரும் பங்கு இன்றியமையாதது என்று புகழாரம் சூட்டினார். களத்தில் நின்று அயராது உழைக்கும் இந்தத் தொழிலாளர்களின் நலன் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்ய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய துணைநிலை ஆளுநர் கே. கைலாஷ்நாதன், தூய்மை பாரத இயக்கம் தற்போது மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளது என்றார். கழிவுகளை அகற்றுவது மட்டுமல்லாமல், தூய்மை குறித்த மக்களின் மனப்பான்மையில் பெரும் மாற்றத்தை இத்திட்டம் ஏற்படுத்தியுள்ளது என்றும், தூய்மைப் பணியாளர்களின் அர்ப்பணிப்புமிக்க உழைப்பே இதன் வெற்றிக்கு முக்கியக் காரணம் என்றும் அவர் பாராட்டினார். மேலும், மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட கழிப்பறை கட்டும் திட்டம் பெண்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தோடு நேரடித் தொடர்புடையது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்விழாவில் சிறப்பாகப் பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு தலா ரூ.2,500 ரொக்க ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை ஆளுநரும் முதல்வரும் வழங்கி கௌரவித்தனர். அத்துடன் தூய்மைப் பணியாளர்களுக்கு ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டு அட்டைகளும், பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டன.

முன்னதாக, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு துணைநிலை ஆளுநர் கே. கைலாஷ்நாதன், முதலமைச்சர் ந. ரங்கசாமி, தற்காலிகப் பேரவைத் தலைவர் ஏ. அன்பழகன், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன