புதுச்சேரியில் காந்தி சிலைக்கு மாலை வழங்காததால் திமுக எம்.எல்.ஏ. ஆவேசம்: அரசு விழாவில் சலசலப்பு!
புதுச்சேரி, அக். 3:
புதுச்சேரி அரசு சார்பில் மகாத்மா காந்தியின் பிறந்தநாள் விழா கடற்கரை சாலையில் அமைந்துள்ள காந்தி சிலை வளாகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அப்போது அரசு விழாவில் பங்கேற்ற உப்பளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி (விக்னேஷ்), காந்தி சிலைக்கு மரியாதை செலுத்துவதற்காகப் படிக்கட்டுகளில் மேலே ஏறிச் சென்றார். ஆனால், அங்கு அவருக்கு அணிவிப்பதற்கு அரசு சார்பில் மாலை எதுவும் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மிகுந்த ஆவேசமடைந்த அவர் உடனே படிக்கட்டிலிருந்து கீழே இறங்கி வந்தார்.
தொடர்ந்து அங்கிருந்த அதிகாரிகளிடம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய அவர், “அரசு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து என்னை அழைத்து இவ்வாறு அவமானப்படுத்துகிறீர்கள். என் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் நடைபெறும் விழாவில், பகுதி எம்.எல்.ஏ.வான எனக்கு மாலை வைத்திருக்கக்கூடாதா?” என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனைக் கண்ட தற்காலிக சபாநாயகர் அன்பழகன் உடனடியாக அங்கு வந்து திமுக எம்.எல்.ஏ.வை சமாதானப்படுத்தினார். அவரிடமும் தனது அதிருப்தியைத் தெரிவித்த எம்.எல்.ஏ.வை, சபாநாயகர் சமாதானம் செய்து இருக்கையில் அமர வைத்தார். இச்சம்பவத்தால் காந்தி ஜெயந்தி அரசு விழாவில் சிறிது நேரம் பெரும் பரபரப்பும் சலசலப்பும் ஏற்பட்டது.