தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் பிரசாரம் நாளை மாலை நிறைவு: வெளியூர் நபர்கள் வெளியேற தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!
புதுச்சேரி, அக். 03: புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரம் நாளை மாலை 6:00 மணியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடிக்குமாறும், தொகுதியில் தங்கியுள்ள வெளியூர் நபர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் மாவட்ட தேர்தல் நிர்வாகம் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது.
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் களத்தில் 6 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் 5 சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 11 வேட்பாளர்கள் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கியக் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் தட்டாஞ்சாவடியில் முகாமிட்டு வீடு வீடாக வாக்கு சேகரித்து வந்த நிலையில், வரும் அக்டோபர் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி நாளை மாலை 6:00 மணியுடன் அனைத்து வகையான தேர்தல் பிரசாரங்களும் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வருகின்றன.
பிரசாரம் ஓய்ந்த பிறகு வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளும் முழுமையான அமைதியைப் பேண வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் அறிவுறுத்தியுள்ளார். நாளை மாலை 6 மணிக்கு மேல் பொதுக்கூட்டங்கள், சாலையோரப் பிரசாரங்கள், ஊர்வலங்கள், பாதயாத்திரைகள் மற்றும் பைக் பேரணிகள் நடத்தக் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வாகனங்களில் பொருத்தப்பட்ட ஒலிபெருக்கிகள், மெகாபோன்களைப் பயன்படுத்தவும் முழுமையாகத் தடை அமலில் இருக்கும்.
குறிப்பாக, தட்டாஞ்சாவடி தொகுதியின் வாக்காளர்களாக இல்லாத பிற அரசியல் தலைவர்கள், வெளிமாவட்ட மற்றும் மாநிலத் தொண்டர்கள், பிரசார நிர்வாகிகள் அனைவரும் நாளை மாலை 6 மணிக்குள் தொகுதியை விட்டு கட்டாயம் வெளியேற வேண்டும். இதனை தீவிரமாகக் கண்காணிக்க பறக்கும் படையினர், நிலை கண்காணிப்புக் குழுவினர் மற்றும் காவல்துறையினர் தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாயக் கூடங்களில் தீவிர சோதனைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
ஊடக விளம்பரங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக கட்டணப் பிரசாரம் மேற்கொள்வதற்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தொலைக்காட்சி, வானொலி, கேபிள் நெட்வொர்க் மற்றும் இணையதளங்களில் தேர்தல் தொடர்பான எந்தவொரு விவாதங்களோ அல்லது விளம்பரங்களோ இடம்பெறக் கூடாது. அக்டோபர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட விரும்பினால், மாவட்ட ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் (MCMC) முன்அனுமதி பெறுவது கட்டாயமாகும். தேர்தல் முடிவடையும் வரை எந்தவொரு கருத்துக்கணிப்புகளையும் வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு நாளன்று வேட்பாளர், தேர்தல் முகவர் மற்றும் கட்சித் தொண்டர்களுக்குத் தலா ஒரு வாகனம் மட்டுமே அனுமதிக்கப்படும். மாவட்ட தேர்தல் அலுவலர் வழங்கிய அசல் அனுமதிச் சீட்டை வாகனத்தின் முன்பக்கக் கண்ணாடியில் ஒட்ட வேண்டும். வாக்காளர்களை வாகனங்களில் அழைத்து வருவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். வாக்குச்சாவடி மையத்திலிருந்து 100 மீட்டருக்கு அப்பால் மட்டுமே வேட்பாளர்களின் உதவி மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும், அதில் ஒரு மேஜை, இரண்டு நாற்காலிகள் மற்றும் இரண்டு நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.