புதுச்சேரி

சட்டசபையில் ரவுடி கூட்டத்தை கொண்டு நேரு முற்றுகை போராட்டம்: என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் கடும் குற்றச்சாட்டு

புதுச்சேரி, அக். 03:
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் ரவுடி கும்பலை அழைத்து வந்து முற்றுகைப் போராட்டம் நடத்தியதாக சட்டமன்ற உறுப்பினர் நேரு மீது என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் தெரிவித்ததாவது: புதுச்சேரியில் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே குற்றவாளி கைது செய்யப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், சட்டமன்ற உறுப்பினர் நேரு தேர்தல் ஆதாயத்திற்காக ரவுடி கும்பலைத் திரட்டி சட்டப்பேரவைக்குள் கொண்டுவந்து முற்றுகைப் போராட்டம் நடத்தியுள்ளார். புதுவை மக்கள் முகம் சுழிக்கும் வகையில் சட்டமன்ற உறுப்பினர் என்ற மாண்பை மீறி அவர் அத்துமீறி செயல்பட்டுள்ளார்.

மேலும், சட்டமன்றத்தில் முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோரை நேரு மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். அங்கு அமைதியாக பேச அழைத்த தற்காலிக சபாநாயகர் அன்பழகனை அவமரியாதையாகப் பேசியதுடன், அமைச்சரைத் தாக்க முற்பட்டுள்ளார். அமைச்சர் புகார் அளித்திருந்தால் நேரு மீது கொலை முயற்சி வழக்கே பதிவு செய்யப்பட்டிருக்கும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதல்வர் ரங்கசாமி உரிய மரியாதை வழங்கி வருகிறார். ஆனால் முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக வரம்பு மீறி அவதூறு பரப்புவதை நேரு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில் என்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்கள் இனி அமைதியாக இருக்க மாட்டார்கள்; தகுந்த பதிலடி கொடுப்போம் என்று வையாபுரி மணிகண்டன் எச்சரித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன