புதுச்சேரியில் போக்குவரத்து விதிகளை மீறிய 17,672 பேர் மீது அதிரடி நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை
புதுச்சேரி, 3/10/2026: புதுச்சேரியில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது புதுவை போக்குவரத்து காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடர்பாக போக்குவரத்து முதுநிலை போலீஸ் கண்காணிப்பாளர் (SSP) திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் போக்குவரத்து விதிகளை மீறிய 17,672 நபர்கள் மீது அபராத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுதல், செல்போன் பயன்பாடு, மதுபோதை, அதிவேகம், சிக்னல் மீறல் மற்றும் எதிர் திசையில் வாகனம் ஓட்டுதல் போன்ற விதிமீறல்கள் மீது தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. மேலும், சிறார்களை வாகனங்களை ஓட்ட அனுமதித்த பெற்றோர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதும், நேரக்கட்டுப்பாட்டை மீறி இயக்கப்பட்ட கனரக வாகன ஓட்டுநர்கள் 6 பேர் மீது எப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
விபத்துகளைக் குறைக்கும் நோக்கில், விபத்து அதிகம் நடக்கும் பகுதிகள் மற்றும் முக்கிய போக்குவரத்து சந்திப்புகளில் இனிவரும் காலங்களில் தொடர்ந்து தீவிர வாகன சோதனைகள் நடைபெறும் என்று போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது. சாலை பாதுகாப்பு விதிகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று காவல்துறை தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.