புதுச்சேரியில் 5 மாத சிலிண்டர் நிலுவை மானியம் பயனாளிகள் வங்கிக் கணக்கில் வரவு: குடிமைப்பொருள் வழங்கல்துறை தகவல்!
புதுச்சேரி, செப்.12:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நிலுவையில் இருந்த கேஸ் சிலிண்டர் மானியத் தொகையில், 5 மாதங்களுக்கான மானியம் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளதாக குடிமைப்பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது.
புதுச்சேரி அரசு சார்பில் சிவப்பு நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.300 மற்றும் மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கு தலா ரூ.150 வீதம் மாதந்தோறும் கேஸ் சிலிண்டர் மானியம் வழங்கப்பட்டு வந்தது. நுகர்வோர் சிலிண்டர் பதிவு செய்து வாங்கிய ஒரு வார காலத்திற்குள் இந்த மானியத் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வந்தது. எனினும், கடந்த டிசம்பர் மாதத்திற்குப் பிறகு நாடாளுமன்றத் தேர்தல் குறுக்கீடு உள்ளிட்ட காரணங்களால் சுமார் 7 மாதங்களாக கேஸ் மானியம், இலவச அரிசி மற்றும் கோதுமை விநியோகம் தடைபட்டிருந்தது.
இதற்கிடையே, சட்டப்பேரவையில் சிலிண்டர் மானியத் தொகையை மேலும் ரூ.50 உயர்த்தி வழங்குவதாக முதலமைச்சர் என். ரங்கசாமி அறிவித்தார். அதற்கான நிர்வாகப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கடந்த 7 மாதங்களாக நிலுவையில் இருந்த சிலிண்டர் மானியத்தில், முதற்கட்டமாக 5 மாதங்களுக்கான நிலுவைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட உயர்த்தப்பட்ட கூடுதல் மானியத் தொகை அரசு ஆணை (G.O.) முறைப்படி வெளியான பிறகு தொடர்ந்து வழங்கப்படும் என்று குடிமைப் பொருள் வழங்கல் துறை இயக்குனர் முத்துமீனா அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
