தேவையே இல்லாமல் மிசா பற்றிப் பேசி அரசியல் பிரச்சனையாக்கி விட்டார் முதலமைச்சர்: சிபிஎம் பாலபாரதி காட்டம்
சென்னை, செப். 12:
சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கையின் போது முதலமைச்சர் தேவையே இல்லாமல் மிசா குறித்து பேசி அரசியல் பிரச்சனையை கிளப்பிவிட்டதாக சிபிஎம் முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த காலங்களில், திமுகவும், அதிமுகவும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி வரிசையில் மாறி மாறி அமர்ந்திருக்கின்றன. அப்போதெல்லாம் ‘எங்கள் ஆட்சியில் இந்தத் திட்டங்களை எல்லாம் செய்திருக்கிறோம்’ என ஒரு தரப்பு பேசினால், ‘இல்லை இல்லை நாங்கள்தான் செய்தோம்’ என எதிர் தரப்பு மறுத்துப் பேசுவதுமான விவாதங்கள்தான் அவையில் அரங்கேறும்.
ஆனால், இப்போது காவல்துறை மானியக் கோரிக்கையின் போது, தேவையே இல்லாமல் மிசா குறித்துப் பேசி முதலமைச்சர் அதனை ஒரு அரசியல் பிரச்சனையாக ஆக்கிவிட்டார். இதையெல்லாம் பார்க்கின்ற பொதுமக்களேகூட, ‘மிசா ஒடுக்குமுறை சட்டம் குறித்த அடிப்படை உண்மைகூட ஆட்சியாளர்களுக்குத் தெரியவில்லையா?’ என்றுதான் அதிர்ச்சியடைகிறார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.


