திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த ‘ஈழத் தமிழ்ப் பெண்கள் குரல்’ அமைப்பினர்!

சென்னை, செப். 12:
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் ‘ஈழத் தமிழ்ப் பெண்கள் குரல்’ அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் இன்று நேரில் சந்தித்துப் பேசினர்.
இலங்கைத் தீவில் தொடர்ந்து நடைபெற்று வரும் கட்டமைக்கப்பட்ட பண்பாட்டு சிதைவு மற்றும் இன அழிப்புக்கு எதிரான சாட்சியங்களாக, ஈழத் தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 10 பெண்கள் அடங்கிய குழுவினர் இச்சந்திப்பில் பங்கேற்றனர். திருகோணமலை சாந்தமலர் அந்தோனிஜோன்சன், மட்டக்களப்பு லக்ஸ்மணரஜனி ஜெயப்பிரகாசி, அம்பாறை சிந்துஜா சௌயன், முல்லைத்தீவு ஜெகதாம்பிகை விக்கினேஸ்வரன், வவுனியா சரோஜா குகநேசதாசன், மன்னார் பற்றீசியா அலெக்ஸ், கிளிநொச்சி வன்செலீன் கந்தசாமி, சுபதர்சினி சச்சிதானந்தம், யாழ்ப்பாணம் ஜமுனா சந்திரகுமார் மற்றும் விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
ஈழத் தமிழர்களின் இன அழிப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் பெரும் அர்ப்பணிப்போடு துணைநின்ற தமிழகத் தொப்புள்கொடி உறவுகளுக்கு அவர்கள் தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். இந்த நிகழ்வின்போது, திமுக மருத்துவ அணிச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் எழிலன் நாகநாதன் உடனிருந்தார்.

