புதுச்சேரியில் 10-வது மாநில அளவிலான யோகா போட்டி: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எம்.எல்.ஏ பி.ரவிக்குமார் பரிசளிப்பு!
புதுச்சேரி: புதுச்சேரி சுல்தான்பேட்டையில் அமெச்சூர் யோகா சங்கம் சார்பில் 10-வது மாநில அளவிலான யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது.
மாநில அளவிலான இந்த யோகாசனப் போட்டியில் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்களது தனித்துவமான யோகாசனத் திறமைகளை வெளிப்படுத்தினர். இப்போட்டியின் நிறைவு மற்றும் பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக சட்டமன்ற உறுப்பினர் திரு. பி. ரவிக்குமார் (MLA) கலந்துகொண்டார்.
தொடர்ந்து, பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற யோகா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு எம்.எல்.ஏ பி. ரவிக்குமார் பரிசுக் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார். பின்னர் அவர் பேசுகையில், “மாணவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கும், மன ஒருமைப்பாட்டிற்கும் யோகா கலை மிகச் சிறந்த வழியாகும்” எனக் குறிப்பிட்டதுடன், யோகாசனப் பயிற்சியில் சிறந்து விளங்கும் குழந்தைகளை வெகுவாகப் பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் யோகா சங்க நிர்வாகிகள் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்துகொண்டனர்.

