மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்!
சென்னை:
தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் சுதன் என்பவர் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், அரசியல் காரணங்களுக்காக சட்டமன்ற உறுப்பினர் பதவிகள் ராஜினாமா செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இந்த இடைத்தேர்தலில் மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோரின் வேட்புமனுக்களை தேர்தல் ஆணையம் ஏற்க தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சுய அரசியல் காரணங்களுக்காக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வதால் அரசுக்கு நிதிச்சுமையும் பொதுமக்களுக்கு சிரமமும் ஏற்படுவதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் இந்த இடைத்தேர்தல் நடவடிக்கைகளுக்கு உடனடியாக இடைக்கால தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.


