புதுச்சேரி

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: தொழிலாளர்களுக்கு அக். 6-ல் சம்பளத்துடன் கூடிய விடுமுறை – மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவிப்பு!

புதுச்சேரி, செப். 13: புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று, அத்தொகுதி வாக்காளர்களான அரசு மற்றும் தனியார் நிறுவனத் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை சுதந்திரமாகவும், முழுமையாகவும் நிறைவேற்றுவதை உறுதி செய்யும் பொருட்டு, மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளின்படி வாக்குப்பதிவு நாள் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.”

மேலும், தட்டாஞ்சாவடி தொகுதியைச் சேர்ந்த வாக்காளர்கள் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் இதர நிறுவனங்கள் தேர்தல் நாளன்று தொழிலாளர்களுக்கு முழு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். தினக்கூலி, தற்காலிகப் பணியாளர்கள் மற்றும் சுழற்சி முறையில் பணிபுரிபவர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். விடுமுறை அளிக்கப்பட்டதற்காக தொழிலாளர்களின் ஊதியத்தில் எவ்வித பிடித்தமும் செய்யக் கூடாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தட்டாஞ்சாவடி தொகுதியில் வாக்குரிமை பெற்றுள்ள தொழிலாளர்கள் வெளித் தொகுதிகளில் உள்ள நிறுவனங்களில் பணிபுரிந்தாலும், அவர்கள் வாக்களிக்க ஏதுவாக உரிய விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்றும், இந்த உத்தரவை மீறும் நிறுவனங்கள் மீது சட்டப்படி கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி எச்சரித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன