புதுச்சேரி காவல் நிலையங்களில் மக்கள் குறைதீர்ப்பு முகாம்: 46 புகார்களில் 24 மனுக்களுக்கு உடனடி தீர்வு!
புதுச்சேரி, செப். 13:
புதுச்சேரி காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) அறிவுறுத்தலின்படி, புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் மக்கள் குறைதீர்ப்பு நாள் முகாம் நேற்று நடத்தப்பட்டது. பொதுமக்களின் குறைகளை நேரில் கேட்டறிந்து, நிலுவையில் உள்ள புகார்களுக்குத் துரிதமாக தீர்வு காணும் நோக்கில் காவல்துறை உயர் அதிகாரிகள் நேரடியாக களமிறங்கினர்.
இந்த முகாமில் புதுச்சேரி போக்குவரத்து பிரிவில் எஸ்.எஸ்.பி திவ்யா தலைமையில் ஆய்வாளர்களுடன் போக்குவரத்து சிக்கல்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. காரைக்காலில் எஸ்.எஸ்.பி வினய் குமார் கட்ஜ், எஸ்.பி பழனிவேல் மற்றும் எஸ்.பி சுபம் சுந்தர் கோஷ் ஆகியோர் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனர். காலாப்பட்டில் எஸ்.பி ஸ்ருதி யாரகட்டி மற்றும் அனுராக் சோப்ரா, தன்வந்திரி நகரில் எஸ்.பி வம்சீதர ரெட்டி, மங்கலத்தில் எஸ்.பி சுப்ரமணியன், கிருமாம்பாக்கத்தில் எஸ்.பி சிந்தா கோதண்டராமன் ஆகியோர் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றனர். மேலும் ஏனாமில் எஸ்.பி வரதராஜன், மாஹேவில் எஸ்.பி தனசேகரன் மற்றும் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் கீர்த்திவர்மன் ஆகியோர் புகார்களை ஆய்வு செய்தனர்.
இந்த மக்கள் குறைதீர்ப்பு முகாம்களில் 16 பெண்கள் உள்பட மொத்தம் 161 பொதுமக்கள் கலந்துகொண்டனர். பெறப்பட்ட 46 முக்கியப் புகார்களில் 24 புகார்களுக்கு சம்பவ இடத்திலேயே உடனடி தீர்வு காணப்பட்டு உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. எஞ்சிய நிலுவை மனுக்கள் மீது விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளுக்கு மூத்த அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
பொதுமக்கள் தங்கள் குறைகளை எளிதில் தெரிவிக்கும் வகையில், இனிவரும் காலங்களில் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 11:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை இந்த மக்கள் குறைதீர்ப்பு முகாம் தொடர்ந்து நடைபெறும் என்றும், உயர் அதிகாரிகள் காவல் நிலையங்களுக்கு நேரில் வந்து குறைகளைக் கேட்பார்கள் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

