அமைச்சர்கள், எம்எல்ஏ-க்களும் ஆண்டுதோறும் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
தமிழகத்தில் அரசு ஊழியர்களைப் போலவே முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் ஆண்டுதோறும் தங்களது சொத்து விவரங்களை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஆசிரியர்கள், நீதிமன்றப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை அரசு ஊழியர்களும் வரும் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் தங்களது சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். அரசு நிர்வாகத்தில் தூய்மையை ஏற்படுத்த இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்றாலும், மக்கள் பிரதிநிதிகளை விடுத்து அரசு ஊழியர்களுக்கு மட்டும் இந்த விதியை அமல்படுத்துவது ஊழலை முழுமையாக ஒழிக்க உதவாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஊழல் ஒழிப்பில் முன்னுதாரணமாக திகழ வேண்டிய முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மேயர்கள் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் நாளில் தங்களது சொத்து விவரங்களைப் பொதுவெளியில் வெளியிட்டு சமூகத் தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும், சொத்து மதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்தால் அதற்கான விளக்கத்தை அளிக்க சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.



