வில்லியனூர் மாட வீதியில் மழைநீர் வடிகால் பணிகள்: எம்.எல்.ஏ ரவிகுமார் நேரில் ஆய்வு!
வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட மாட வீதி பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி. ரவிகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வில்லியனூர் மாட வீதியில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்காமல் சீராக வெளியேறும் நோக்கில், புதிய மழைநீர் வடிகால் கான்கிரீட் அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளின் முன்னேற்றம் மற்றும் தரம் குறித்து எம்.எல்.ஏ ரவிகுமார் களத்தில் இறங்கி அதிகாரிகளுடன் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கு வந்த அப்பகுதி பொதுமக்கள், மழைக்காலம் தொடங்குவதற்குள் வடிகால் பணிகளை மிக விரைவாக முடித்து தர வேண்டும் என்று எம்.எல்.ஏ-விடம் கோரிக்கை விடுத்தனர்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ரவிகுமார் எம்.எல்.ஏ, உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே எவ்வித தாமதமும் இன்றி பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். பொதுமக்களின் கோரிக்கைக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த எம்.எல்.ஏ-விற்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
