உயர் TDS குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு: முதல்வர் ரங்கசாமியிடம் எம்.எல்.ஏ நாராயணசாமி மனு!

புதுச்சேரி, செப். 13:
புதுச்சேரி தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் நிலவி வரும் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணக் கோரி, சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கே. நாராயணசாமி முதல்வர் என். ரங்கசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார்.
எஸ்.எம்.எஸ் நகர், ஸ்ரீ சிவசக்தி நகர், வயல்வெளி நகர் மற்றும் லூயிஸ் ரெட்டியார் கார்டன் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் வழங்கப்படும் குடிநீரில் அதிகளவிலான உப்புத்தன்மை (High TDS) காணப்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார்களை தெரிவித்து வந்தனர். இதனால் குடிநீரைப் பயன்படுத்த முடியாமல் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு வந்தது.
இப்பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்த எம்.எல்.ஏ டாக்டர் கே. நாராயணசாமி, முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்து நிலைமையை எடுத்துரைத்தார். மேலும், சம்பந்தப்பட்ட பகுதிகளில் உடனடியாக குடிநீர் தரப் பரிசோதனை மேற்கொள்வதோடு, பொதுமக்களின் நலன் கருதி சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீர் வழங்கும் வகையில் புதிய ஆர்.ஓ (RO) குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்துத் தர வேண்டும் என்றும் அம்மனுவில் வலியுறுத்தியுள்ளார்.