புதுவை தொழிலாளர் துறைக்கு தனி ஆணையரை நியமிக்க வேண்டும்: ஏ.ஐ.யு.டி.யு.சி. பொதுக்குழுவில் தீர்மானம்
புதுச்சேரி, செப். 12:
புதுச்சேரி தொழிலாளர் துறைக்கு தனியாக ஆணையரை நியமிக்க வேண்டும் என்றும், துறையில் காலியாக உள்ள 70-க்கும் மேற்பட்ட பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்றும் அகில இந்திய தொழிலாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஏ.ஐ.யு.டி.யு.சி. (AIUTUC) தொழிற்சங்கத்தின் அகில இந்திய பொதுக்குழு கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதுவை மாநில செயலாளரும், அகில இந்திய பொதுக்குழு உறுப்பினருமான சிவக்குமார் கலந்துகொண்டு புதுச்சேரி மாநில தொழில் மற்றும் தொழிலாளர் நிலைமைகள் குறித்து விரிவாகப் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், “புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசு தொடர்ந்து தொழிலாளர் நலன்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. மாநிலத்தில் புதிய தொழிற்சாலைகளைக் கொண்டுவர எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், மூடப்பட்ட பஞ்சாலைகள், கூட்டுறவு நூற்பாலை, கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளிட்ட பல்வேறு அரசு கூட்டுறவு நிறுவனங்களை மீண்டும் திறக்க அரசு முன்வரவில்லை” என்று குற்றம் சாட்டினார்.
மேலும், “தொழிலாளர் துறைக்கு தனியாக முழுநேர ஆணையர் நியமிக்கப்படாததால் அதிகாரிகள் சரிவர பணியாற்றுவதில்லை. எனவே, புதுவை அரசு தொழிலாளர் துறைக்கு உடனடியாக தனி ஆணையரை நியமிக்க வேண்டும். அத்துடன் இத்துறையில் காலியாக உள்ள 70-க்கும் மேற்பட்ட பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்” என வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, புதுவை அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுக்குழுவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
