புதுச்சேரி

புதுச்சேரி கடற்கரையில் காயம் அடைந்து கரை ஒதுங்கிய குட்டி டால்பின்: கடலோர காவல் படை சாமர்த்தியமாக மீட்டது!

புதுச்சேரி, செப். 12:
புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் கடலோரப் பகுதியில் வாயில் காயம் அடைந்த நிலையில் உயிருடன் கரை ஒதுங்கிய குட்டி டால்பினை, கடலோர காவல் படையினர் மற்றும் கடற்கரை பாதுகாப்பு ஊழியர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு பத்திரமாக ஆழ்கடலில் விட்டனர்.

வம்பாகீரப்பாளையம் கடல் பகுதியில் நேற்று ஒரு குட்டி டால்பின் கரை ஒதுங்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. அதன் வாய்ப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் வலியால் தொடர்ந்து சத்தமிட்டுக் கொண்டிருந்தது. இதைக் கண்ட கடற்கரை பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் கடலோரக் காவல் படையினர் விரைந்து சென்று டால்பினை மீட்டனர்.

முதலில் கடலோரக் காவல் படையினர் அந்த டால்பினைப் பிடித்து கடலுக்குள் கொண்டு போய் விட்டனர். ஆனால், அது மீண்டும் நீந்த முடியாமல் கரைக்கே திரும்பியது. தொடர்ந்து இரண்டாவது முறையாக கடலுக்குள் விடப்பட்டபோதும் மீண்டும் கரைக்கு வந்ததால், உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் டால்பினைப் பரிசோதித்து, அது ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பதை உறுதி செய்தனர். அதன்பின்னர் மூன்றாவது முறையாக டால்பினை விசைப்படகு மூலம் ஆழமான கடல் பகுதிக்குக் கொண்டு சென்று பாதுகாப்பாக விட்டனர். அப்போது டால்பின் வெற்றிகரமாக ஆழ்கடலை நோக்கி நீந்திச் சென்றது. டால்பினை மீட்ட கடலோரக் காவல் படை மற்றும் லைப்கார்டுகளுக்குப் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன