புதுவை பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியார் நினைவுநாள் அனுசரிப்பு: துணைவேந்தர் மலரஞ்சலி
புதுச்சேரி, செப். 12: புதுவைப் பல்கலைக்கழகத்தில் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவுநாள் நிகழ்ச்சி, பாரதியார் மொழி மற்றும் இலக்கியப் புலத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய பல்கலைக்கழக துணைவேந்தர் சுரேஷ்பாபு, அங்குள்ள பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பல்கலைக்கழகக் கலை மற்றும் கலாச்சார உறவுகளின் முன்னாள் இயக்குநர் பேராசிரியர் கிளமெண்ட் லூர்து, தமிழியல் புலத் தலைவர் முனைவர் ரவிக்குமார் மற்றும் துறைப் பேராசிரியர்கள் பாரதியாரின் உருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி புகழாரம் சூட்டினர்.
நிகழ்வில் சிறப்புரையாற்றிய தமிழியல் துறைத் தலைவர் முனைவர் ரவிக்குமார், பாரதியாரின் நினைவுகளைப் போற்றும்போது புரட்சிக் கவிஞர் பாரதிதாசனையும் நினைவு கூர்வதன் அவசியத்தை விளக்கினார். மேலும், ‘பாரதியாரோடு பத்து ஆண்டுகள் பாரதிதாசன்’, ‘என் குருநாதர் கனகலிங்கம்’ மற்றும் ‘சித்திரபாரதி’ ஆகிய முக்கிய வரலாற்று நூல்களின் முக்கியத்துவத்தையும் சிறப்புகளையும் மாணவர்களிடையே எடுத்துரைத்தார்.
முன்னதாக தமிழ்ப்புலப் பேராசிரியர் முனைவர் ஸ்ரீவித்யா, தமிழியல் புலத்தில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு இலக்கிய நிகழ்வுகள் மற்றும் விழாக்களின் சிறப்புகளை விவரித்து நன்றியுரை ஆற்றினார். இந்த நினைவுநாள் நிகழ்வில் தமிழியல் புலப் பேராசிரியர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள் மற்றும் முதுகலை, இளங்கலை மாணவ-மாணவிகள் திரளாகப் பங்கேற்றனர்.
