தவறான சிகிச்சையால் 7 வயது சிறுமி ஜிப்மரில் உயிரிழப்பு: தனியார் மருத்துவமனை மீது உறவினர்கள் குற்றம்சாட்டி சாலை மறியல்!
நாமக்கல்: பள்ளியில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தைக் கண்டித்து மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் தேசிய நெடுஞ்சாலையில் உடலுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கவிக்ஷா (7) என்ற சிறுமி பள்ளியில் விளையாடியபோது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் பரமத்தி வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அளிக்கப்பட்ட முறையற்ற சிகிச்சை காரணமாகக் காலில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு, சிறுமியின் வலது கால் முழங்கால் வரை அகற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் மேல் சிகிச்சைக்காகப் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 5 அன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
சிறுமியின் மரணத்திற்குத் தனியார் மருத்துவரின் அலட்சியமே காரணம் எனக் கூறி, ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கரூர் – நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சிறுமியின் உடலுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரிஷ் அசோக், உரிய விசாரணை நடத்தப்பட்டு தவறிழைத்த மருத்துவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

