புதுச்சேரி

தேசிய ஸ்பெஷல் ஒலிம்பிக் வலுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று புதுவை மாற்றுத்திறனாளி மாணவர் விஷால் சாதனை!

புதுச்சேரி, செப். 7: உத்திரபிரதேச மாநிலம் காசிப்பூரில் நடைபெற்ற தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்பெஷல் ஒலிம்பிக் வலுதூக்கும் போட்டியில், புதுச்சேரி மதகடிப்பட்டு பகுதியைச் சேர்ந்த மாணவர் விஷால் தங்கப் பதக்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.

புதுச்சேரி மதகடிப்பட்டு, புதுநகரைச் சேர்ந்த திருநாவுக்கரசு – சுந்தரி தம்பதியரின் மகன் விஷால் (23). மாற்றுத்திறனாளியான இவர், கலிதீர்த்தாள்குப்பத்தில் உள்ள பாரத ரத்னா டாக்டர் காமராஜர் அரசு கல்லூரியில் பி.பி.ஏ. (சுற்றுலா) மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். உடற்கட்டமைப்பு மற்றும் பளுதூக்கும் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் தொடர்ந்து தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில், உத்திரபிரதேச மாநிலம் காசிப்பூரில் தேசிய அளவிலான ஸ்பெஷல் ஒலிம்பிக் பவர்லிஃப்டிங் (வலுதூக்கும்) போட்டி கடந்த 3-ஆம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் புதுவை மாநிலத்தின் சார்பில் பயிற்சியாளர் பாக்கியராஜ் தலைமையில் மாணவர் விஷால் பங்கேற்றார்.

இப்போட்டியின் 59 கிலோ உடல் எடைப் பிரிவில் களமிறங்கிய விஷால், ஸ்குவாட் (Squat) பிரிவில் 175 கிலோ, டெட்லிஃப்ட் (Deadlift) பிரிவில் 175 கிலோ மற்றும் பெஞ்ச் பிரஸ் (Bench Press) பிரிவில் 90 கிலோ என ஒட்டுமொத்தமாக 440 கிலோ எடையைத் தூக்கி அசத்தினார். இதன்மூலம் அவர் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றதுடன், அகில இந்திய அளவில் மிக உயரிய ‘ஸ்ட்ராங் மேன் ஆஃப் இந்தியா’ (Strong Man of India) என்ற பட்டத்தையும் வென்று புதுச்சேரி மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். சாதனை படைத்த மாணவர் விஷாலுக்கு கல்லூரி நிர்வாகத்தினரும், ஊர் பொதுமக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன